1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களைப் பற்றிய முழு வரலாறு தெரியாமலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள். சில வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்களுடைய வரலாற்று நூல்களில் களப்பிரரின் ‘இருண்ட காலத்தை’ ஒரே வரியில் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவுதான். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் வரலாற்றில் ஒளியைப் பாச்சுகிறார் நூலின் ஆசிரியர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.